சென்னை: பறக்கும் ரயில் வழித்தடத்தை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2 ஆண்டுகளில் பறக்கும் ரயில் வழித்தடத்திலும் ‘மெட்ரோ’வுக்கு இணையான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பறக்கும் ரயில் வழித்தடத்தை (எம்ஆர்டிஎஸ்) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முன்மொழிவுக்கு ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தெற்கு ரயில்வே-தமிழக அரசு இடையே கையெழுத்தாகியுள்ளது.
தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ், பறக்கும் ரயில் வழித்தடம் 1997-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. சென்னையில் கடற்கரை - வேளச்சேரி இடையில் 19 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் ரயில் சேவை இயங்கியது.
அதன் பிறகு, வேளச்சேரி - பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, இத்தடம் நடப்பாண்டில் மார்ச் 15-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போது இந்த தடத்தில் 23.98 கி.மீ. தொலைவுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இதற்கிடையே, பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதன்படி, பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கடந்த 2025 ஜூலை 31-ல் முதல்கட்ட (கொள்கை அளவில்) ஒப்புதலை வழங்கியது.
இந்நிலையில், பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முன்மொழிவுக்கு ரயில்வே அமைச்சகம் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தெற்கு ரயில்வே - தமிழக அரசு இடையே கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வே தனது சொத்துகள் மற்றும் பொதுவான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை (முக்கிய ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தவிர்த்து) 90 நாட்களுக்குள் ஒப்படைக்கும்.
மேலும், இரண்டு ஆண்டுகள் கொண்ட மாறுதல் காலத்துக்குள் (transition period) முழு ரயில் இயக்கமும் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்த 2 ஆண்டு காலத்தில், மாநில அரசு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்த வேண்டும்.
2 ஆண்டுகளில் பறக்கும் ரயில் வழித்தடத்திலும் ‘மெட்ரோ’வுக்கு இணையாக, சர்வதேச தரத்திலான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பொலிவுடன் மாறுகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “பறக்கும் ரயில் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வசதிகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை மாநில அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகமே ரயில்களை இயக்கும். அதற்குள் ஏசி ரயில் இயக்கம், பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி என அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும். அதன்பிறகு, இத்தடம் புதுப்பொலிவுடன் மாறும்” என்றனர்.