எம்ஆர்கே பன்னீர்செல்வம்
புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக, ரூ.3 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மற்றும் மகன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்யத மறுஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த கீழ்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இதைதொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பில் கடலூர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதியும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.