கரூர்: சுய விருப்பத்தின்பேரில்தான் தவெகவில் இணைந்தேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தவெகவில் இணைந்தபோது மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவெகவில் இணையுமாறு யாரும் என்னை அழைக்கவில்லை. அதிமுகதலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வந்தனர்.
கரூர் தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்டபோது பெரும்பாலானோர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்தே யாருடைய அழுத்தமும் இல்லாமல், முதல்வர் விஜய் தலைமையை ஏற்று தவெகவில் இணைந்தேன். தவெக நிர்வாகிகளோ, தவெகவில் இணைந்தவர்களோ அழைப்பின்பேரில் தவெகவில் இணையவில்லை. எனது சுய விருப்பத்தின்பேரிலேயே தவெகவில் இணைந்தேன்.
கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் சாலை அமைக்காமல் ஊழல் செய்தது குறித்து அப்போதே புகார் அளித்தோம். அதிகாரிகள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தவெக ஆட்சி அமைந்ததும் அமைச்சர் உள்ளிட்டோர் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.