மாணிக்கம் தாகூர் எம்.பி

 
தமிழகம்

“100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து போராடுவோம்” - மாணிக்கம் தாகூர் எம்.பி

இ.மணிகண்டன்

விருதுநகர்: "மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மக்களைத் திரட்டி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம்" என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்தும் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை கைவிட்ட மத்திய அரசைக் கண்டித்தும் விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் ரயில் நிலைய முகப்பில் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை வகித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது, “நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் 7 லட்சம் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடக்கிறது.

வேலை உரிமைச் சட்டத்தை எதிர்த்த மோடி அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரி 45 நாள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம், கிராமங்களுக்கு செல்லும் போராட்டம், சத்தியாகிரக போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம், ஆளுநர் மாளிகை முன்பு என போராட்டம் தொடரும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில் 60 சதவீத தொகை மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் கொடுக்க வேண்டும். மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் இத்திட்டம் நிறுத்தப்படும். இதை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் மூத்த நிர்வாகிகள் சிவகுருநாதன், பாலகிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT