சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு: சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழக அரசு உடனே உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய மோதல்
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இந்தியாவில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல், மீண்டும் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளைக் கையாளுதல் போன்ற முடிவுகள் குறித்து 10 மாதங்களில் குறைந்தது 14 முறை முறையான ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தங்கள் கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை மத்திய மயமாக்குவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.
இவை இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மீது மிகக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
நமது தேர்தலின் நம்பகத்தன்மையே கேள்விகுறியாகியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு உள்ளிருந்தே கேள்விகள் எழும் போது, அரசும் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களுக்குத் தெளிவான பதில்களை வழங்கக் கடமைப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.