சென்னை: தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள், குறைந்த மாணவர் சேர்க்கையின் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், போலி சமூக நீதி பேசும் திமுக அரசின் இரட்டை வேடத்தை நமக்குப் பட்டவர்த்தனமாக்குகிறது. ஆதிதிராவிடர் மாணவர் நலன் குறித்த நமது கோரிக்கைகள் எதற்கும் செவிசாய்க்காத திமுக அரசு, தனது அலட்சியத்தால் இன்று நூற்றுக்கணக்கான அரசு மாணவர் விடுதிகளை மூடியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு மாணவர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்குவது, குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராதது, மாணவர்களை சாதிரீதியாகத் திட்டுவது, வார இறுதி நாட்களில் வலுக்கட்டாயமாக மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது, முடிந்தவரையில் அரசு விடுதிகளை மூடுவது என ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனை அடகுவைத்து ஆணவமாக செயல்படும் திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நயினார் நாகேந்திரன் மேற்கோள் காட்டியுள்ள அவரின் முந்தைய பதிவில், “ தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்கப்படுதில்லை எனவும், விடுதி மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் திமுக அரசின் முகத்திரையை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.
தன் பிள்ளை ஒருவேளை (அசைவ) உணவையாவது வயிறார உண்ணட்டும் என்ற ஆசையில் தான் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒருவேளை உணவைக் கூட கொடுக்க இயலாதவர்கள் அரசு மாணவர் விடுதிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.
ஆனால் திமுக அரசின் ஆட்சியில் பள்ளி சத்துணவில் புழு, பூச்சி, பல்லி மிதக்கிறது. அரசு விடுதிகளில் உணவு மறுக்கப்படுகிறது. இப்படி எளிய பின்புலமுள்ள மாணவர்களின் உணவு விஷயத்தில் திமுக அரசு ஒரு மெத்தனப்போக்கைக் கடைபிடிப்பதன் பின்னணியில் ஆளும் வர்க்கத்தின் ஆணவம் ஒளிந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
மேலும், குடியைக் கெடுக்கும் சாராயக்கடை வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி இயங்கும் பொழுது, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை மட்டும் எதற்காக வார இறுதி நாட்களில் மூட வேண்டும்?
திமுக ஆட்சியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளை, விடுதியில் இருந்து துரத்தினால் அவர்கள் எங்கு போவார்கள்? இதுதான் திமுகவின் எல்லோருக்குமான ஆட்சியா? வெற்று விளம்பரங்களிலும் பாராட்டு விழாக்களிலும் மதி மயங்கிக் கிடக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை எப்போதுதான் கவனிப்பார்?’ எனத் தெரிவித்துள்ளார்.