“டாஸ்மாக் கடைகளில் பறித்த பணத்தில் மகளிர் உரிமைத் தொகை...” - சவுமியா அன்புமணி சாடல்

பாமகவின் ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்’ கூட்டத்தில் பேச்சு
“டாஸ்மாக் கடைகளில் பறித்த பணத்தில் மகளிர் உரிமைத் தொகை...” - சவுமியா அன்புமணி சாடல்
Updated on
2 min read

விழுப்புரம்: “டாஸ்மாக் கடைகள் மூலம் நமது பணத்தை பெற்றுக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் நம்மிடம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள்” என பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி குற்றம்சாட்டினார்.

பாமக சார்பில் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் ‘சிங்கப்பெண்ணே எழுந்துவா’ என்ற தலைப்பில் விழுப்புரம் அடுத்த கொய்யாத்தோப்பு கிராமத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்ற கூட்டம் இன்று (டிச.15) நடைபெற்றது. அதில், பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது: “பாமக நிறுவனர் ராமதாஸின் ஆணைக்கிணங்க வன்னியர்களுக்காக நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்றனர். இவர்களில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.

கல்வி, வேலை வாய்ப்புக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளின் எண்ணம் நிறைவேறவில்லை. இதற்காகவா அவர்கள் உயிரை விட்டனர்?

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் படிப்பில் கடைசி மாவட்டமாகவும், டாஸ்மாக் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

குடியை கொடுத்துவிட்டு, பணம் வந்தால் போதும் என ஆட்சியை நடத்துகின்றனர். பள்ளி திறக்கப்படும், வேலை வழங்கப்படும் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், டாஸ்மாக் கடையை அதிகளவில் திறந்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு வீட்டில் ஒருவர் குடித்த நிலையில், தற்போது ஒரு கிராமமே குடிக்கிறது. திருமண மண்டபத்தில் சம்பந்திகள், மாப்பிள்ளை, அவரது நண்பர்கள் என அனைவரும் குடிக்கின்றனர். தமிழகத்தை குடிகார நாடாக மாற்றிவிட்டனர். இதுதான், ஆட்சியாளர்கள் கொண்டு வந்த மாற்றம்.

பாளையங்கோட்டை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மது குடிக்கும் காட்சிகள் வெளியானது, மிகப் பெரிய அவமானம். பொம்மை கடை, மிட்டாய் கடையை திறப்பது போன்று டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.

6 வயது குழந்தை முதல் 80 வயது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரசு பள்ளியில் போதை பழக்கம் அதிகம் உள்ளது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி மட்டுமே கூறி வருகிறார். பெண் குழந்தைகள் மற்றும் தாலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

டாஸ்மாக் கடைகளை திறந்து, நம்மிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் நம்மிடம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக்கில் ரூ.700 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு ஏற்ப இட பங்கீடு அளிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. இதில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும். டாஸ்மாக் மற்றும் போதை கலாச்சாரத்தை ஒழித்து, மகளிர் பாதுகாப்புக்கு அன்புமணி முக்கியத்துவம் கொடுக்கிறார்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாம். ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தால் டாஸ்மாக் கடை, போதை மற்றும் கள்ளச்சாராயத்துக்கு பூட்டு போடப்படும். படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.

முன்னதாக, விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தில் உள்ள வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவுத் தூணில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

“டாஸ்மாக் கடைகளில் பறித்த பணத்தில் மகளிர் உரிமைத் தொகை...” - சவுமியா அன்புமணி சாடல்
தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்று உச்சம் - காரணம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in