சென்னை: சென்னையைச் சேர்ந்தவர் கோயல் (80). வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வந்தார்.
தனது மகன் மீது புகார் கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “எனக்குச் சொந்தமான வீட்டை எழுதி வாங்கிக்கொண்ட மகன் சூரஜ், வயதான காலத்தில் என்னை ஆதரவின்றி விட்டுவிட்டார்.
எனவே மாதாந்திர பராமரிப்பு செலவுத் தொகை வழங்க மகனுக்கு உத்தர வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கோயலுக்கு மாதம்தோறும் ரூ.75 ஆயிரத்தை பராமரிப்புச் செலவாக வழங்க சூரஜுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சூரஜ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன் கூறியதாவது:
தனது பிற சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை வருவாயை மறைத்து குடும்ப நல நீதிமன்றத்தில் கோயல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எனவே, பராமரிப்புச் செலவுத் தொகை பெற அவருக்கு உரிமை இல்லை. எனவே, கோயலுக்கு மாதம்தோறும் ரூ, 75 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறேன்.
அதேநேரம், வயதான காலத்தில் மூத்த குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் அன்பு, ஆதரவு, அரவணைப்பை பணத்தால் ஈடுசெய்ய முடியாது. தந்தை - மகன் இடையே உள்ள பிரச்சினைகள் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு, சுமுக உறவு ஏற்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.