பிரதமர் மோடி

 
தமிழகம்

பிரதமர் மோடி இன்று கோவையில் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தமிழகம் வந்து செல்கிறார். ஏப்ரல் 3-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை வந்த அவர், சென்னையில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, 15-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பாஜக-வின் பலமான கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து அவர் சிறப்புரையாற்றுகிறார்.

வரும் 21-ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் தமிழகத்துக்கு படையெடுக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT