

சங்ககிரியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம்.
“இது தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான தேர்தல்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல், வீரபாண்டியில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீபாலாஜி சுகுமார் ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி இயற்கையானது, வலிமையானது. ஆனால், திமுக கூட்டணியில ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகின்றனர். தேர்தலுக்கு முன்னரே ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து கொண்டார். தொகுதிமறுவரையறை குறித்து தவறான தகவலை பரப்பி, எதிர்ப்பு தெரிவிக்க கருப்புச்சட்டை அணிந்ததாகக் கூறினார்.
பிரதமர் மோடி, தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறையாது என்று நாடாளுமன்றத்தில் மாலை 6 மணிக்கே அறிவித்து விட்டார். ஆனால், 7 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசும்போதும் ஸ்டாலின் கருப்புச்சட்டை அணிந்து கொண்டிருக்கிறார். கருப்புச் சட்டையை கழற்ற வேண்டியது தானே? தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று நான் ஏற்கெனவே கூறினேன். இபிஎஸ் சொன்னால் அது சரியாக இருக்கும்.
தேர்தல் தமிழகத்தில் தான் நடக்கிறது. ஆனால், டெல்லிக்கும் தமிழகத்துக்கும் தான் போட்டி என்று ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு மூளைகுழம்பிவிட்டது. தமிழகத்துக்கு ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்தை அதிமுக தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. கடந்த 2 தேர்தல்களிலும் 11 தொகுதிகளில் 10 தொகுதியில் அதிமுக-வை வெற்றி பெறச்செய்த சேலம் மாவட்ட மக்கள், இம்முறை 11-க்கு 11 என வெற்றி பெற வைக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான தேர்தல். அதிமுக வெற்றி பெறாவிட்டால், திமுக குடும்பம் சர்வாதிகாரக் குடும்பமாகிவிடும். நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி வெளியான ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத்தெரியாமல் தவிக்கின்றனர்” என்றார். 2 ஆண்டுகளிலேயே ரூ.30 ஆயிரம் கோடி என்றால், 5 ஆண்டுகளில் எவ்வளவு சேர்த்திருப்பார்கள்?
அவர்கள் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. முதலீடு செய்வதற்காக வெளிநாடு செல்கின்றனர். பாட்டிலுக்கு ரூ.10 என்றால் உங்களுக்கு ஒருவரை தெரியும். தமிழகத்தில் 6 ஆயிரம் மதுக்கடைகள் மூலம் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 என மாதம் 450 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடியை கொள்ளை யடித்துள்ளனர்.
அதிமுக-வினர் மது அருந்த மாட்டார்கள். எனவே, திமுக-வினரின் பணத்தைத் தான் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் மீது, அமலாக்கத் துறை ஆதாரங்களை அளித்தும், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தததும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், நெசவாளர் களிடம் கொள்முதல் செய்து தீபாவளி தோறும் பெண்களுக்கு விலையில்லா பட்டுப்புடவை வழங்கப்படும்.
திமுக-வினர் நன்றாக குண்டு குண்டாக மாறிவிட்டார்கள். ஏனென்றால், எந்த கடைக்குப் போய் சாப்பிட்டாலும் பணம் கொடுப்பதில்லை. பரோட்டா, பிரியாணி சாப்பிடுவது தப்பில்லை. ஆனால்,பணம் கொடுக்க வேண்டும். ஆனால், அதிமுக-வினர் ஒரு டீ குடித்தால் 2 டீக்கு காசு கொடுப்பார்கள். ஏனென்றால், இது எம்ஜிஆர் கட்சி. கொடுத்துக்கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தமான கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.