தமிழகம்

தென், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (ஏப்.7, 8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம், வளசரவாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

          

சென்னை அடையாறு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்கானா, ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்தக் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக, தென் தமிழகம், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் (ஏப்.7,8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்-9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்10-ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.11,12 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏப்.9-ம் தேதி முதல் ஏப்.11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT