சென்னை: சிறுநீரக நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனத்தைச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் ஃபவுண்டேஷன் சார்பில் மொபிஸ் இந்தியா மற்றும் டேங்கர் அறக்கட்டளையின் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ் சிறுநீரக நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நோய் கண்டறியும் மையத்தில் இயங்கும் ஆர்சிஎம்இ டேங்கர் டயாலிசிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டது. அதை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில், அமரும் பகுதி, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கான படுக்கை வசதி, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அளவிடும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ரத்தத்தில் உள்ள கிரியாட்டினின் அளவை ஒரே நிமிடத்துக்குள் துல்லியமாகக் கண்டறியும் பிரத்யேக பரிசோதனை பட்டை (ஸ்டிரிப்), சிறுநீரக புரதம் மற்றும் ரத்த கசிவை அறியும் சிறுநீர் பரிசோதனை வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பாதிப்புகளைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு மேல் பரிசோதனையாக சிறுநீரக ஸ்கேன் உள்ளிட்ட உரிய சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ள முடியும். வாகனத்தை தொடங்கி வைத்த பின்னர், மாநகராட்சி ஆணையர் அந்த மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சைகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மொபிஸ் இந்தியா ஃபவுண்டேஷன் தலைவர் ஜி.நரசிம்மன், டேங்கர் ஃபவுண்டேஷன் தலைவர் ஜார்ஜ் ஆபிரகாம், நிர்வாக அறங்காவலர் லதா குமாரசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.