சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது லண்டன் பயணத்தை முடித்து நேற்று இரவு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் சென்றார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து உதயநிதி ஸ்டாலினும் லண்டன் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஸ்டாலின், அதன்பின் சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்தார்.
தனது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு அவர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுகவினர் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, நேற்று காலை 7 மணி அளவில் ஸ்டாலின் சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏராளமான கட்சித் தொண்டர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினர். ஆனால், விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவரது வருகை தாமதமானது.
இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், திமுக தொண்டர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதில் போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டாலின் வர தாமதமாகும் என்பதால் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.