தாராபுரம்: “துரோகத்துக்கு மக்கள் சம்மட்டி அடி தர வேண்டும்” என்று தாராபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டம் சித்தராவுத் தன்பாளையம் மாருதி நகரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுத்தேர்தல் முடிந்து 5 மாதங்கள் கூட ஆகாத நிலையில், இந்தத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஜனநாயகத்தைச் சாகடித்ததாலும், ஆளும் கட்சியின் ஆசைக்கு இணங்கி தம்மை விலைக்கு விற்றதாலும் இந்தத் தேர்தல் உருவானது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அரிசி, சர்க்கரை, எண்ணெய், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம், கட்டண உயர்வுடன் கூடிய பல மணி நேர மின்வெட்டால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலை மறியல் செய்யும் சூழல் நிலவுகிறது.
தமிழ்நாட்டின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சருக்கும் ஆளும் கட்சிக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளருக்குச் சம்மட்டி அடியாகவும், மரண அடியாகவும் சுகன்யாவை மகத்தான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாய் திறங்க சிஎம் சார்: பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மக்கள் முன்னாள் பேசும் முதல்வர், பத்திரிகையாளர்கள் முன்னால் பேச முடிவதில்லை. இந்த லட்சணத்தில் என்னைப் பார்த்து ‘‘வாய திறங்க ஸ்டாலின் சார்..’’ என்று கத்துகிறார். நானும் சொல்கிறேன் ‘‘சிஎம் சார்... ப்ரோ... நான் எல்லாத்துக்கும் பேசிட்டுதான் இருக்கேன். தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? சிஎம் சார் என்ன பயம்? பிஜேபி என்றால் அவ்வளவு பயமா சிஎம் சார்? ” என்று பேசினார்.