மு.க.ஸ்டாலின்

 
தமிழகம்

“மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி...” - மு.க.ஸ்டாலின்

தமிழினி

சென்னை: மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பனையூர் பாபு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றும் போது, '' திமுகவைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபுவை வரவேற்கிறேன்.

இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம் நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் நான் சொன்னேன், "ஆறு மாதங்களுக்கு இதைப்பற்றி நான் பேசப் போவதில்லை" என்று. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது; வந்துவிட்டது.

அதைப் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் அல்ல... மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்தில் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, கழகம் ஈடுபடும் எந்தப் பணிகளாக இருந்தாலும், அந்தப் பணிகளுக்கு நீங்களும் ஒத்துழைப்பு தருவதற்காக வந்திருக்கிறீர்கள்" என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT