திமுக மகளிரணி, தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
தமிழகம்

பாஜகவின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படும் முதல்வர் விஜய்: ஸ்டாலின் விமர்சனம்

ஆதரவு கொடுத்த கட்சிகள் தர்மசங்கடத்தில் தவிப்பு என கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ‘பாஜகவின் ஜெராக்ஸ் மாதிரி முதல்வர் செயல்படுவதால், அவருக்கு ஆதரவு கொடுத்தகட்சிகள் தற்போது தர்மசங்கடத்தில் தவிக்கின்றன’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக மகளிரணி, தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் 6 மாதம்கூட விமர்சிக்காமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சிநடக்குமா என்றுதான் பேசினேன்.

அதை திரித்து, ஆட்சியைக் கவிழ்க்க சதியா? என்று நமது எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்ட னர். திமுக ஒரு விழிப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையைச் செய்யும். இந்த ஆட்சியின் குறைகளைத் தொடர்ந்து தட்டிக்கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

திமுக ஆட்சியில் விடியல்பயணம், மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு திட்டங்களை நாம் கொண்டுவந்தோம். ஆனால், தற்போதைய ஆட்சியில் மின்தடை, விவசாயக் கடன்தள்ளுபடி நாடகம் போன்றவற்றால் வாக்களித்த பொதுமக்களேஅதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன. ஸ்ரீவைகுண்டம், ஆலந்தூர், சேலம் ஆகிய இடங்களில் ஆளுங்கட்சியினரான தவெக நிர்வாகிகளே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். தவெகவிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென மக்கள்கேட்கும் நிலை உருவாகி யுள்ளது.

தற்போதைய முதல்வருக்கு தன் ஆட்சியின் மீதே நம்பிக்கை இல்லாததால், அதிமுக எம்எல்ஏக்களை ‘ஷாப்பிங்’ செய்துவருகிறார். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ராஜினாமா செய்யவைத்து, தன் கட்சியில் இணைத்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார். இதன் மூலம் அவர் பாஜகவின் ஜெராக்ஸ் போலச் செயல்படுகிறார். அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் எல்லாம் தற்போது தர்மசங்கடத்தில் தவிக்கின்றன.

வாக்குறுதிகளை நிறைவேற்றக் காலஅவகாசம் தரலாம். ஆனால், மக்களின் பாதுகாப்பு குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. சமீபத்தில் டெல்லியில் நடந்தநிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், நாம் நிர்ணயித்த 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை 1.5 ட்ரில்லியன் என மாற்றி காப்பியடித்துள்ளார். முன்பு நான் டெல்லி சென்ற போது, வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவிடம் சரணடைவதாக விஜய் விமர்சித்தார்.

தற்போது கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் அவர் டெல்லி சென்றாரா? கல்வி நிதிக்காக மத்திய அரசிடம் நாங்கள் போராடியதை ‘சிறுபிள்ளைத்தனம்’ என நையாண்டி செய்தவர், இப்போது டெல்லி சென்று அதே நிதியை நிபந்தனையின்றி வழங்கும்படி கேட்டுள்ளார். இது சினிமா அல்ல, அரசு நிர்வாகம் என்பதை அவர் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

துரைமுருகன் அதிருப்தி: முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவாலயம் வந்தார். கூட்ட அரங்கத்துக்கு வந்தவர் திடீரென திரும்பி சென்றுவிட்டார். தனக்கு சரியான வரவேற்பு இல்லாததால் அதிருப்தியில் அவர் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT