சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டாததால், திமுக உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆக.5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே சட்டப்பேரவை விவாதங்களின்போது திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என கட்சித் தலைவர் ஸ்டாலின் கருதுகிறார். குறிப்பாக நேற்று முன்தினம் திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் மீது அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதுதொடர்பாக, முக்கிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போது, தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகளை வலுவான ஆதாரங்களுடன் விமர்சிப்பதற்குப் பதிலாக, அவையில் தனிப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிப்பதாக கண்டிப்புடன் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவை கூட்டத்தொடரில் திமுக சார்பில் பேச முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை ஸ்டாலின் ஏற்கெனவே நியமித்திருந்தார். அவர்களின் செயல்பாட்டிலும் தலைமைக்கு திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவை ‘1,000 ஏக்கர் நிலமும் ஏராளமான கால்நடைகளும் வைத்துள்ள பெரிய விவசாயி’ எனக் குறிப்பிட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற நகைச்சுவைப் பேச்சுகளைத் தவிர்த்து, விவாதிக்கப்படும் மக்கள் பிரச்சினைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். தவெக அரசின் குறைபாடுகளை துல்லியமாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இதை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர்.
இந்த சூழலில் அவையில் நகைச்சுவையாகவும், தேவையற்ற வகையிலும் பேசுவதால் என்ன பயன்? மக்களுக்குப் பயன்படும் முக்கிய நலத்திட்டங்கள், கோரிக்கைகளை மட்டுமே வலுவாக வலியுறுத்திப் பேச வேண்டும்.
தவெக அமைச்சர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி கேட்க வேண்டும். அநாவசிய பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.