

சென்னை: மக்களவையில் பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் திருத்த மசோதா காரணமாக தமிழகம் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த மசோதாவை திரும்பப் பேற வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பதிவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தங்கம் தென்னரசு: மக்களவையில் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் திருத்த மசோதா, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.
ஒரு மாநிலம் கொண்டிருக்கும் கனிம வளங்கள் மூலம் எவ்வித வரி வருவாயும் அந்த மாநிலம் ஈட்ட முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் II-ன் 50-வது பிரிவின் கீழ், மத்திய அரசு நிர்ணயிக்கும் ராயல்டியில் இருந்து தனித்து, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று தெளிவாக உறுதி செய்த தீர்ப்பை இந்த மசோதா மறுக்கிறது.
வருவாய் ஈட்டும் அதிகாரத்தை மாநிலங்களிடம் இருந்து பறிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால், தமிழகம் சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது. அந்த வருவாய் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள்நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.
நிதி உரிமை பறிப்பு
மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிர்வகித்து, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை மத்தியில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும். சீர்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது.
எனவே, தமிழகத்தின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்ப்பதோடு, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.
கனிமொழி: கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள், கனிமங்கள் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் முறையான விவாதங்களின்றி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இது, மாநில உரிமைகள் மீதான நேரடி தாக்குதல்.
கடந்த 2024-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இந்த திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்
தோடு அமைந்துள்ளது. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.