முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் தலா 5, மதிமுக 4, முஸ்லிம் லீக், மமக, கொமதேக தலா 2 மற்றும் எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓட்டுமொத்தமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி ஜெயங்கொண்டம், திருவெறும்பூர், ஏப்ரல் 4-ல் கரூர், திருப்பூர், 5-ல் நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்பின் முதல்வர் ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஏப்ரல் 6-ல் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 21-ம் தேதி வரை அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிநாளான 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்யஉள்ளார். இதனால் அடுத்த வாரம் முதல் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நெல்லையில் கனிமொழி? - இதற்கிடையே, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மாநில அரசியலில் தடம் பதிக்க விரும்புகிறார். தற்போது தென்மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள கனிமொழி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
குடும்ப உறவுகள் மூலம் தலைமையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் வாய்ப்பு கிடைத்தால் கனிமொழி திருநெல்வேலி தொகுதியில் களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.