தமிழகம்

ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த மானநஷ்ட வழக்கு: ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு

ஆர்.பாலசரவணக்குமார்

திசென்னை: தனக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி, தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் எனக்கூறி திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, 258 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால், அமலாக்கத் துறை குறிப்பிட்டிருந்த ஜான் பிரிட்டோ, தனது உறவினர் அல்ல எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதிலளிக்க மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங்குக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆதவ் அர்ஜுனாவின் மாமனார், மாமியார், மாமியாரின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. ஆதவ் அர்ஜுனாவும் சிபிஐ வழக்கை எதிர்கொண்டிருக்கிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை எதிர்கொண்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார். ஆனால்,அதை எல்லாம் மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். சுத்தமான கரங்களால் அவர் நீதிமன்றத்தை அணுகாததால், எந்த நிவாரணமும் கோர உரிமையில்லை.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோவை தொடர்புபடுத்தியோ பதிவுகள் வெளியிடும்படி, ஐடி விங்குக்கு ஒப்புதலோ, அறிவுறுத்தலோ வழங்கவில்லை. கட்சியின் பல்வேறு பிரிவுகள் சமூகவலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு, தலைவர் என்பதற்காக தன்னை பொறுப்பாக்க முடியாது.

கட்சியின் தலைவர் என்ற முறையில் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மீது, நிர்வாக ரீதியில் கட்டுப்பாடு உள்ளதே தவிர, அந்த அணியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு தன்னை சட்ட ரீதியாக பொறுப்பாக்க முடியாது. ஜான் பிரிட்டோ என்ற பெயரில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு உறவினர் இருக்கிறார் என்பதையோ, அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு உள்ளது என்பதையோ, ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் மறுக்கவில்லை.

எனவே, வேண்டுமென்று உள்நோக்கத்துடன் பதிவுகளை வெளியிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்துவரும் நிலையில், அவரை அவமதித்ததாகக் கூறுவது வினோதமானது.

ஏற்கெனவே, தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, தற்போது மானநஷ்டஈடு கோர முடியாது. அவருடைய நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை.இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய திமுக ஐடி விங் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT