சென்னை: சென்னையில் பிரபலமான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வரும் குமாரராஜா முத்தையா பாரம்பரியக் கலை மற்றும் கைவினைப் பள்ளி சங்கத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள குமாரராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி என்ற பதிவு பெற்ற சங்க உறுப்பினரான வி.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துகள் உள்ளன.
வங்கி முதலீடுகளும் அதிகளவில் உள்ளன. கல்வி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. எங்களது சங்கச் செயலாளராக பதவி வகித்த குமாரராணி டாக்டர் மீனா முத்தையா கடந்த மே 2-ம் தேதி காலமானார்.
இந்த அசாதாரணமான சூழலில் சங்க விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் கே.டி.ஆர்.ராஜா கருப்பன் செட்டி என்ற கருப்பையா தனது அடியாட்கள் மூலமாக சங்க நிர்வாகத்தையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளையும், வங்கி முதலீடுகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார்.
ரூ.800 கோடிக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளார். இது தொடர்பாக ராஜா கருப்பன் செட்டி மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட கல்வி நிலையங்களை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகியை நியமித்து, சம்பந்தப்பட்ட ராஜா கருப்பன் செட்டி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்றும், சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ராஜா கருப்பன் செட்டியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வருகின்றனர்.
எனவே, அவர்கள் மீது குற்றச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, சங்கங்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துதல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மே 26-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கல்வி நிறுவனங்களை நடத்திவரும் இந்த அமைப்பின் நிர்வாகம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து விவகாரங்களில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாணவர்களின் நலனையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக வாதிட்டார்.
அதையடுத்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.யோகராஜா சேகர், ‘‘இது தொடர்பாக மனுதாரர் அளித்துள்ள புகார் மீது வருவாய் கோட்டாட்சியர் இன்று (நேற்று) இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவர்களின் நலன் கருதி மனுதாரர் கடந்த மே 26-ம் தேதி அளித்துள்ள புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.