உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர். கூலித் தொழிலாளி. திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2023-ல் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் போக்சோ வழக்கில் ஆனந்த் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை நீதிமன்றம் விசாரித்து பிஞ்சுக் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
தூக்குத் தண்டனையை உறுதி செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்து நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சமூகத்தின் அளவீடு, பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றவாளி உடலுக்கு எதிராக மட்டுமல்ல, மூன்று ஆன்மாக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளார். கொலை செய்து விடுவதாக மிரட்டி, இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். இதுபோன்ற குற்றத்துக்கு இரக்கம் காட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
குழந்தைகளின் உணர்வுகளை மலிவாகக் கருதி, குற்றவாளி சிறையில் மீதிக் காலத்தை கழிப்பதை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. குழந்தைகளைப் பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாகவே செயல்படும். இந்த உத்தரவு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நீதி வழங்கும் மற்றும் சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி.
எனவே, இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. நீதிமன்றப் பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை மறைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.