சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிகள், தொலைபேசி எண்களின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர் களிடம் தெரிவிக்க முடியும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். அதன்பின் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதுடன், துறைவாரியாக கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
அதன்தொடர்ச்சியாக பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கவும், அரசின் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கவும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள் ளது. அதன்படி, முதல்வருக்கு பிரத்யேக மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகளுடன், அவர்களின் செல்போன் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதையடுத்து பொதுமக்கள் அமைச்சர்களின் எண்களுக்கு தொடர்புகொண்டு நேரடியாகத் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இந்த அழைப்புகளை சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் கையாள்வர். பொதுமக்களின் புகார்கள் மற்றும் பிரச்சினைகளின் தன்மை, அதன் தீவிரத்தை பொறுத்து அவை உடனே, சார்ந்த அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும்.
அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள், அவர்கள் எம்எல்ஏ.வாகப் பொறுப்பு வகிக்கும் தொகுதிக்காக வழங்கப்பட்டவையாகும். இது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், தொலைபேசி எண்கள் பகிரப்படுவது புதிய நடைமுறை என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.