புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்காக நடந்த முகாமை ஆய்வு செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நிர்வாகிகள் எடுத்து வெளியிட்ட ‘ரீல்ஸ்’ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.
இந்த முகாமை ஆட்சியர் எம்.அருணா ஆய்வு செய்து விட்டு சென்ற பின், அங்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம், மாநகராட்சி கவுன்சிலர் சேட் (எ) அப்துல் ரகுமான் மற்றும் கட்சியினர் அங்கு வந்தனர். அவர்களை மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் அழைத்துச் சென்று முகாம் குறித்து விளக்கினார். அப்போது, ஆவணங்களை எடுத்துப் பார்த்து சில ஆலோசனைகளை இப்ராஹிம் கூறினார்.
ஆய்வுப் பணி முடிந்ததும் புறப்பட்ட முகமது இப்ராஹிமை மண்டபத்தின் வாசல் வரை சென்று ஆணையர் வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான நிர்வாகிகள் எடுத்த ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கு செல்லக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.