சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினமான ஆகஸ்ட் 3-ம் தேதியன்று, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அவரது 221-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், ஏ.ராஜ்மோகன், எஸ்.ராஜேஷ்குமார், ரா.குமார் ஆகியோர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சின்னமலையின் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
தன்னம்பிக்கை, தேசப்பற்று
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.அருள் பிரகாசம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் விஜய்: தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று, தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை. திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி. நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரை தூக்கிலிட்டாலும் அவர் புகழை தமிழகம் போற்றிக் கொண்டே இருக்கும்.
பாமக தலைவர் அன்புமணி: நாட்டைக் காப்பதில் தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்: போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு, கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் வணங்கிடுவோம். இவ்வாறு அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.