காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்
திருவாரூர்: லஞ்சம் வாங்கக் கூடாது, ஊழல் செய்யக் கூடாது. அதேநேரம், சிபாரிசு செய்வதில் தவறு இல்லை என உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில உயர் கல்வித் துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான விஸ்வநாதனுக்கு வரவேற்புக் கூட்டம் நேற்று முன்தினம் கட்சியின் மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேசியது: உயர் கல்வித் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகிப்பதன் மூலம் ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸார் அதிகாரிகளை சந்திக்க வேண்டும். அவர்களிடம் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்துள்ளதை அதிகாரிகள் விரும்புகின்றனர்.
காமராஜர், கக்கனைப்போல லஞ்சம் வாங்காத அரசியல் பாதையில் நாம் அனைவரும் செல்ல வேண்டும். லஞ்சம் வாங்கக் கூடாது, ஊழல் செய்யக் கூடாது என்றுதான் சொன்னேனே தவிர, சிபாரிசு செய்யக் கூடாது என்று நான் சொல்லவில்லை. சிபாரிசை புறக்கணிக்கிறவர் தலைவராக இருக்க முடியாது. இதுதான் ஜனநாயகம். சிபாரிசு என்பது ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட எழுதப்பட்ட விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
முழுமையான தகுதியின் அடிப்படையிலேயே எந்த ஒரு பணியிலும் முன்னுரிமை வழங்கப்படும் என ஆட்சி குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் சிபாரிசு செய்வது தவறில்லை என்று பேசியிருப்பது சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.