தமிழகம்

“அதை திமுகவினர் தான் செய்திருப்பார்கள்” - பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் அமைச்சர் வினோத் கருத்து

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “கோவை பெரியார் அறிவுலகம் நூலக ஊழலை திமுகவினர்தான் செய்திருப்பார்கள்” என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இயற்கை வேளாண் விளை பொருட்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

அமைச்சர் வினோத் தலைமை வகித்து விற்பனையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களில் சுமார் 1,305 கிலோ அளவிலான வேளாண் விளைபொருட்கள் வாரந்தோறும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு, கும்பகோணம் உழவர் சந்தையில் முறைப்படி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தலைதீபாவளி கொண்டாடப்பட்டு இருக்கலாம். ஆனால், 2026-ம் ஆண்டின் இந்த தீபாவளியே உண்மையான தலைதீபாவளியாக அமைந்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய், உண்மையான நரகாசுரர்களை அழித்து, தமிழக மக்களுடன் கொண்டாட உள்ளார். இனி தமிழக மக்களுக்கு எப்போதுமே நல்ல காலம்தான். உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சோழன் மாளிகை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரு மூட்டையில் மட்டுமே சிறிது கலப்பட அரிசி வந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்று தொடர்ந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, “அதை திமுகவினர் தான் செய்திருப்பார்கள்” எனப் பதிலளித்தார்.

இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், மாவட்ட ஆட்சியர் ரேவதி, மாநகராட்சி ஆணையர் சுதா, வேளாண்மை இணை இயக்குநர் சாருமதி, கோட்டாட்சியர் திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT