கோப்புப்படம்
விழுப்புரம்: ‘‘தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் போன்ற தம்பிகள் படிப்பதற்காகதான் நான் அமைச்சராகி உள்ளேன். அவரின் கல்விக்கு அரசு உறுதுணையாக இருக்கும்’’ என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மாணவர் பாரதிதாசன் ஆராய்ச்சி படிப்பு செலவினங்களுக்கான தொகையைக் கேட்டுள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் அந்தத் தொகை விடுவிக்கப்படும். அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. அவர் படிக்க வேண்டும், அவர் போன்ற மாணவர்கள் படிப்பதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். அவரின் படிப்புக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். அவர் எனது தம்பி. தமிழகத்தில் உள்ள அவர்போன்ற தம்பிகள் படிப்பதற்காகதான் நான் அமைச்சராகி இருக்கிறேன்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியின்போது 609 மாணவர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 601 பேர் தகுதி உடையவர்கள். 181 பேருக்கு உதவித் தொகை அனுப்பட்டப்பட்டது. அதில் பாரதிதாசனும் ஒருவர். இதற்காக முந்தைய அரசு ஒதுக்கிய நிதி ரூ.84.89 கோடி. இந்த ஆண்டு, புதிய ஆட்சியில் 437 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 365 பேருக்கு உதவித் தொகை அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக இம்முறை ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தவித முறைகேடும் இல்லாமல் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பாரதிதாசனுக்கும் உயர் கல்வி உதவித் தொகை சென்று சேரும்.
ஒரு மாதத்துக்கு முன்பு அவர் தனக்கு உதவித் தொகை வரவில்லை எனச் சொன்னவுடன் உடனடியாக அவரின் பல்கலைக்கழக கல்விக் கட்டணம் ரூ.6 லட்சமும், வாழ்க்கை செலவினங்களுக்காக ரூ.6 லட்சமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீதித் தொகையை அவர் துறையில் கேட்டிருக்கிறார். அந்தத் தொகையும் அனுப்பிவைக்கப்படும். யாரும் எந்தவிதமான பதற்றமும் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இந்த அரசு பட்டியலின மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தக் கூடிய அரசு. அவர்களை பாதுகாக்கக் கூடிய அரசு என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, தனக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்று மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்ததும், இது தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.