

மாணவர் பாரதிதாசன்
சென்னை: தனக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்று மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசன் நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக தீவிரம் பெற்றுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். இவர், தனது இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித் தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். அது குறித்து சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு அரசு இன்னும் உதவித் தொகை வழங்கவில்லை. இதனால் தன்னை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி படிப்பில் இருந்து வெளியேற்றும் சூழல் நிலவுவதாக மாணவர் பாரதிதாசன் கண்ணீர் மல்க நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு வைத்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்வினை
மாணவர் பாரதிதாசனின் வீடியோ வெளியான நிலையில், இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். “எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்லை, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் தவெக அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். திமுக-வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்” என்று அதில் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்
“அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமூகநீதி (நேற்று) நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோஃபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.
மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாதது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.
அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும், அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த ரீல்ஸ் அரசு துணை நிற்க வேண்டும்” என்று அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சமூக நீதி துறை விளக்கம்
மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட வீடியோ தொடர்பாக தமிழக அரசின் சமூக நீதி துறை விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி / ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழக அரசு சமூக நீதி துறையால் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு மாணவருக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவை சேர்த்து அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
மாணவர் பாரதிதாசன் என்பவர் மலேசிய நாட்டில் உள்ள நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் மலேசியா (Universiti Kebangsaan Malaysia)-ல் முனைவர் பட்ட ஆய்வு (Tissue Engineering and Regenerative Medicine) படிப்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026 ஆம் ஆண்டு முதல் மொத்தம் மூன்றாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டிற்கு ரூ.36 லட்சம் வரை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் பரிந்துரை கடிதம் 2025-ல் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதலாம் கல்வி ஆண்டான 2025-26ல் அம்மாணவரின் படிப்புக்கு மொத்தம் ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர் உரிய ஆவணங்களை சரிவர சமர்ப்பிக்காமல் இரண்டாம் ஆண்டிற்கான (2026-27) கல்வி உதவித்தொகையினை முழுமையாக வழங்கிட கோரிவந்த நிலையில், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவேண்டிய முழு கல்விக்கட்டணம் ரூ.5.57 லட்சம் பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரது வங்கிக்கணக்கிற்கும் ஆக மொத்தம் ரூ.12 லட்சம் இரண்டாம் கல்வியாண்டிற்காக 2026-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவினபட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.
இந்நிலையில், மாணவர் முதலாமாண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக சமர்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962-க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்தும், மாணவரால் ஆராய்ச்சி செலவினங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக 20.08.2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், இதுவரையில் சரியான விளக்கம் மாணவரால் அளிக்கப்படவில்லை.
மேலும், மாணவர் பயிலும் பல்கலைக்கழக பதிவாளருக்கு மாணவர் பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு கல்விக்கான ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, மாணவர் தெரிவித்துள்ள ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் அம்மாணவரின் ஆராய்ச்சிக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து செப்.17-ம் தேதி அன்று துறை சார்ந்த தரப்பில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டது.
பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன், மாணவர் பாரதிதாசன் சமூக வளைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் இரண்டாமாண்டிற்கு ரூ.12 லட்சம், ஆக மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவரது காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது.
2025-26ம் ஆண்டு சமூக நீதி துறையால் கல்வி உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணவர்களில் பாரதிதாசன் என்பவரை தவிர வேறு எந்தவொரு மாணவரிடமிருந்தும் கல்வி உதவித் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவது தொடர்பாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை என்பதுடன் அனைத்து மாணவர்களுக்கும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் சமூக நீதி துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் பாரதிதாசன் மறுப்பு
“சமூக நீதி துறையில் இருந்து மீண்டும் மீண்டும் என் மீது பழி சுமத்துகிறார்கள். இது குறித்த உண்மையை உடைத்து பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் தொகை முதலாம் ஆண்டுக்கான தொகையாகும். அது குறித்த ரசீதுகள் அனைத்தையும் நான் ஏற்கெனவே சமர்ப்பித்து விட்டேன்.
முதலாம் ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வழங்கினீர்கள். நான் ரூ.37 லட்சத்துக்கான ரசீதை சமர்பித்துள்ளேன். ஆறு மாத செலவு தொகையை நீங்கள் வழங்கினீர்கள். அதுவும் முடிந்துவிட்டது. எனது ஆய்வு பணி சார்ந்த செலவுக்கான கல்வித் தொகையை வழங்க வேண்டுமென்று நான் கோரினேன். அதற்கான ரசீதுகளை ஏற்கெனவே சமர்பித்து விட்டேன். ஆனால், அனைத்து விவரங்களையும் நான் அனுப்பிய பிறகும், அனுப்பவில்லை என ஐடி விங் மூலாம் தவறான தகவலைப் பரப்பி எனது கனவை சிதைக்கிறீர்கள்” என்று மாணவர் பாரதிதாசன் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.