தமிழகம்

கனிமங்களை சந்தைப்படுத்த பொதுத்துறை நிறுவனம்: அமைச்சர் டி.கே.பிரபு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ரூ.2 கோடியில் மாநில அளவிலான சுரங்கக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க, ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைகோள் அடிப்படையிலான ‘சுரங்க கண்காணிப்புப் பிரிவு’ உருவாக்கப்படும்.

ஒருங்கிணைந்த மின்னணு கனிம மேலாண்மை தளமும், கனிமங்களைச் சந்தைப்படுத்த ‘தமிழ்நாடு கனிமவள மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்’ என்ற பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்படும்.

முறைகேடுகளைத் தடுக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் ‘கண்காணிப்புப் பிரிவு’ அமைக்கப்படும். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் குண்டுபெரும்பேடு மற்றும் வெள்ளரை கிராம ஏரியில் ‘தாவர புதைப்படிம பூங்கா’ அமைக்கப்படும்.

ஆட்டுக்கல், அம்மிக்கல் , கற்சிலைகளை தயாரிக்கும் சிறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான சாதாரணக் கற்கள் தடையின்றி கிடைக்க, ஒழுங்குமுறை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும். சுரங்கத்துறை இயக்குநரகத்தில் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT