தாம்பரத்தில் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் நல்ஆதரவு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். உடன் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமார், செங்கை ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர். (அடுத்தபடம்) அரசு புற்றுநோய் நல்ஆதரவு மையம்.படங்கள்: எம்.முத்துகணேஷ்
தாம்பரம்: ரூ.30.16 கோடி மதிப்பீட்டில் தாம்பரத்தில் கட்டப்பட்ட அரசு புற்றுநோய் நல்லாதரவு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். கரோனா காலத்தில் விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவமனையை ஒட்டி 180 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை கட்டப்பட்டது.
அதன்பின் இந்த மருத்துவமனை பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, அந்த கட்டிடத்தை ரூ.30.16 கோடி செலவில் மேம்படுத்தி, புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கான ‘நல் ஆதரவு’ சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
இம்மருத்துவமனையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். 180 படுக்கை வசதி கொண்ட இதில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 16, பொது சிகிச்சை பிரிவில் 134, கட்டணம் பிரிவில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.
இம்மருத்துவமனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் இயங்கும். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மூன்று ஷிப்டுகளில் இங்கு பணிபுரிவர். இம்மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி எந்த மாநிலத்தில் இருந்தும் வரலாம்.
அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம், காஞ்சிபுரத்தில் ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கரோனா காலத்தில் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த தாம்பரத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நல் ஆதரவு மையமாக தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் இருப்பவர்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
இதுபோன்ற ஒரு மருத்துவமனையை திறப்பது என்பது நாட்டிலேயே (அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை) இதுவே முதல் முறை. ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் இங்கு வந்து தங்கலாம்.
இங்கு தேவையான வலி நிவாரண மருந்து, உணவு, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தக் கூடிய கவுன்சிலிங், தியான மையம், நுாலகம் ஆகியவை அமைக்கப்படும்.
இதைத்தவிர, டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதேபோல், சமீபத்தில் திறக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதற்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலசந்தர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி இராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.