அமைச்சர் சிவசங்கர், எடப்பாடி பழனிசாமி
சென்னை: “பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் வரும்” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் திமுக கூட்டணியின் பலம், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் பலவீனம் என்று பட்டியலிட்டுப் பேசி, மக்கள் ஏன் மீண்டும் திமுக ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்று விளக்கினார்.
அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனக்கிருக்கும் சிக்கல்களை மறைப்பதற்காக மீண்டும் மீண்டும் திமுக மீது தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார். ஒரு காலத்தில் வட இந்திய கட்சிகள் அதிமுக தலைவர் வீட்டு வாசலில் காத்திருந்ததுபோய், இன்றைக்கு ஒவ்வொரு முடிவையும் டெல்லிக்கு பறந்து சென்று எடுத்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்டவர் திமுக கூட்டணியையும், அரசையும், முதல்வரையும் தேவையில்லாமல் விமர்சித்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் டெல்லி சென்றுவந்த பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்பதை அறிவிக்கும் சூழலில்தான் அவர் இருக்கிறார். அது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அவர் மட்டுமல்ல, அவருடைய கூட்டணியில் உள்ள அமமுக, பாமக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கூட டெல்லிக்கு போய்வந்த பின்னர் தான் தங்களின் பிரச்சினைகள் தீர்ந்தது என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.
இப்படி எல்லாவிதத்தில் அவருடைய கூட்டணியில் இருப்பவர்களே, கூட்டணிக்கு தலைமை பாஜக, தலைவர் அமித் ஷா என்று உணர்த்தி வருகின்றனர். அப்படியிருக்க அவர் திமுக-வை அடிமைக் கூட்டணி என்பது தேவையற்ற விமர்சனம், அதுவும் குறிப்பாக அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விமர்சித்து வருகிறார். அக்கட்சி படிப்படியாக தேர்தல் களத்தில் சவால்களை சந்தித்து வளர்ந்த கட்சி. அதன் தலைவர் திருமாவளவன் ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் வெற்றியை நிரூபித்து வருகிறார்.
நல்லுறவோடு உள்ள எங்களின் திமுக கூட்டணியை பழனிசாமி விமர்சிக்கிறார். ஆனால், அவர் கூட்டணியில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கொடுத்ததோடு, இந்தமுறை கூட்டணிக் கட்சிகள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடவும் வழிவகுத்துள்ளார். பாஜக, தமாகா மட்டுமல்லாது ஜான்பாண்டியனின் கட்சி, புதிய நீதிக் கட்சியும் கூட தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலை வந்துள்ளது. தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தாமரைக்கு பழனிசாமி மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்.
எதிர்காலத்தில் பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை, மகாராஷ்டிராவில் சிவ சேனா, சரத் பவார் கட்சிகள், கோவாவில் மாநிலக் கட்சிகள் சந்தித்த நிலைதான் பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் ஏற்படப்போகிறது.
இப்படிப்பட்டச் சூழலில் அதிமுக தொண்டர்களின் சுய மரியாதையை காப்பதுதான் திராவிடக் கட்சி என்று சொல்லும் அக்கட்சி எடுக்கும் சரியான நடவடிக்கையாக இருக்கும். இபிஎஸ் என்னதான் மேக் அப் போட்டு மறைத்தாலும் அவருடைய ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் அமித் ஷா தான் இருக்கிறார் என்பது கிராமங்கள் வரைக்கும் தெரியும். அதிமுக என்பதை அடிமை திமுக என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதுதான் கட்சியினரே சொல்வதாக உள்ளது. அமித் ஷா கொடுக்கும் ஸ்க்ரிப்ட்டை மாற்றிவிடாமல் அப்படியே பழனிசாமி வாசிக்கிறார்.
மோடியா - லேடியா? என்று பாஜகவுக்கு சவால்விட்டவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு மோடி தான் எல்லாமே என்று சொல்லி மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவுக்கு பழனிசாமி நடந்து கொள்கிறார்.
இந்த நேரத்தில் ‘டெல்லிக்கு தமிழ்நாடு அவுட் ஆஃப் கன் ட்ரோல்’ என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் தலைமையில் தமிழக மக்கள் ஒன்றுதிரண்டு கொண்டிருக்கிறார்கள். திமுக 2.o மீண்டும் மலரக் கூடிய சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, எத்தனை முறை வேண்டுமானாலும் பேசி மனநிறைவோடு கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, தொகுதி ஒப்பந்தங்களும் சுமுகமாக நடைபெறுகிறது.
என்டிஏ கூட்டணி அமித் ஷா வாயசைவுக்கு ஏற்ப இயங்குகிறது, திமுக கூட்டணி சுயமரியாதையுடன் இயங்குகிறது, இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் பேசினார்.