கோப்புப் படம்
பாபநாசம்: லஞ்ச ஒழிப்பு சோதனையில், மடியில் கனமில்லை என்றால் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள். போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. அவர்களை மாணவர்கள் மதித்து நடக்க வேண்டும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவர்கள் மகிழக்கூடிய வகையிலான அறிவிப்புகள் வரும்.
முன்னாள் அமைச்சரின் வீடுகளில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அது அரசுத் துறைகளின் வழக்கமான நடைமுறைதான். மடியில் கனமில்லை என்றால் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை கல்லணையைத் திறக்கும் நிகழ்வில் மாவட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொள்வார்கள்” என்று அவர் கூறினார்.