சென்னை: தென்மண்டல அளவில் மிகச்சிறப் பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்புக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தவர், பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் டாம்கோ எனப்படும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினரின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டியில் இக்கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தில் முகவர்களாகச் செயல்படும் தென் மண்டல மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
இதில், 2025-26-ம் நிதியாண்டில் தென்மண்டல அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்புக்கு முதல் பரிசு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இந்த விருதை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.
தென்மண்டல அளவில் முதல்பரிசு பெற்று சாதனை படைத்த டாம்கோ அமைப்புக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.