பெரம்பலூரில் கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய அமைச்சர் ஷாஜகான். உடன், ஆட்சியர் அப்துல் ராசிக், எம்எல்ஏ சிவக்குமார்.

 
தமிழகம்

“374 திட்டங்களுக்கு ரூ.900 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை” - அமைச்சர் ஷாஜகான் குற்றச்சாட்டு

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: “சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 374 திட்டங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.900 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை” என்று தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெரம்பலூரில் கிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம் சீரமைப்பு, பள்ளிவாசல்களில் கவரஸ்தான் அமைப்பது உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின பெண்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க ரூ.100 கோடி சுழல்நிதி ஒதுக்கப்படும்.

சிறுபான்மையின நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 374 திட்டங்களுக்கு ரூ.900 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. அந்த நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

வஃபு வாரியம், கோயில் நிலங்களை தனிநபர்கள் உரிமை கொண்டாட முடியாது. பட்டா இல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு பட்டா வழங்கப்படும். தமிழகத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும், முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் அப்துல் ராசிக், எம்எல்ஏ சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT