அமைச்சர் செங்கோட்டையன்
கோவை: “சட்டப்பேரவைக்குள் இருந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து சொல்லியிருந்தால், அதற்கான பதில் கிடைத்திருக்கும்” என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வர் விஜய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் முழுமையாக கேட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச வேண்டும். முதல்வர் சிந்தனை வேறு. தமிழகத்தில் நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும் என நினைக்கிறார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம்.
சட்டப்பேரவையை விட்டு வெளியே போய் கருத்து சொல்லாமல், உள்ளே இருந்து முழுமையாக கேட்டுவிட்டு கருத்து சொல்லலாம். அதற்கான பதிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைத்திருக்கும். திமுக கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால்தான், மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளில் இருந்து கல்லூரியில் படிப்பவர்கள் வரை அனைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியில் பெரும் பங்கு உண்டு.
முதல்வர் விஜய் பிறந்தநாளன்று பள்ளி மாணவர்கள் கட்சிக் கொடி ஏந்தியதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் தமிழகத்துக்கு வந்தபோது 2 முறை தேசியகீதம் இசைக்கப்பட்டது. சட்டப் பேரவைக்குள் 2 முறை தேசியகீதம் இசைக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பாஜக ஆதரவை கேட்கவில்லை. என்றைக்கும் கேட்கவில்லை. பாஜகவின் நயினார் நாகேந்திரன் காமெடியாக பேசிக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் தவறு செய்யமாட்டோம், தவறு செய்யவிடமாட்டோம் என முதல்வர் சொல்லியுள்ளார். எனவே, கோடநாடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.