அயதுல்லா அலி கமேனி |கோப்புப் படம்
புதுடெல்லி: மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய ராணுவத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். அவருடன் அவரது மகள், மருமகன், ஒரு பேரக்குழந்தை ஆகியோரும் உயிரிழந்தனர். இஸ்லாமிய சட்டங்களின்படி ஒருவர் இறந்த 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும், மேற்கு ஆசியாவில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக கமேனியின் இறுதிச் சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் வரும் ஜூலை 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இறுதி நிகழ்வு ஜூலை 9-ம் தேதி மஷாத் நகரில் நடைபெறும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த அழைப்பு தொடர்பாக பிரதமர் மோடி தரப்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சீனா, ரஷ்யா, கத்தார், பிரான்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பில், தங்கள் நாட்டின் தூதுக்குழு இறுதிச் சடங்கில் பங்கேற்கும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.