தமிழகம்

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது: அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: வெளிசந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நிறுவனங்கள் ரூ.41.50 கோரியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் தேவை கடந்தாண்டை விட 3 ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளதாலும், மத்திய மின் தொகுப்பிலிருந்து எதிர்பார்த்த அளவு மின்சாரம் கிடைக்காததால் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே 2 வாரங்களுக்கு முன் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க, வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. அதில் ஒரு யூனிட்க்கு ரூ.31 முதல் அதிகபட்சமாக ரூ.37 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எரிவாயு உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படுவதால் அதிக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று, 2026-ம் ஆண்டு டிச முதல் 2027-ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் உச்ச நேர மின் தேவைக்கு 2100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.

அதில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நிறுவனங்கள் ரூ.41.50 கோரியிருந்தது. ரூ.37-க்கு மின்சாரம் வாங்கும் போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரூ.41.50 மின்சாரம் கொள்முதல் செய்யவுள்ளதாக வெளியான தகவல் பெறும் சர்ச்சையானது.

இதனிடையே இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “நிறுவனங்கள் கோரும் ரூ.37 முதல் ரூ.41 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படாது.

டெண்டர் நேற்று விடப்பட்ட நிலையில் நிறுவனங்கள் அதிக விலையை கோரியுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்கு போதுமான அளவில் மின்சாரம் கையிருப்பில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடை காலத்துக்கே இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளதால் இந்த விலை நியாயமற்றது. மேலும் வரும் நாட்களில் நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT