

எண்ணூரில் நேற்று இரவு கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையில் சென்ற வாகனங்கள் மீது சீறிய கடல் அலை.
பொன்னேரி: அர்னாப் புயல் எதிரொலியாக நேற்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக சென்னை, எண்ணூர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
ஆந்திராவில் அர்னாப் புயல் நேற்று இரவு கரையைக் கடக்க இருந்த நிலையில் நேற்று மாலை முதல், வடசென்னை பகுதிகளான எண்ணூர், திருவொற்றியூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இதில் எண்ணூர், பாரதியார் நகர் பகுதியில் ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகளால் கடற்கரையைக் கடந்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கடல்நீர், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்துச் சென்றன.
சுனாமியை நினைவூட்டியது
அதுமட்டுமல்லாமல் இந்த கடல்நீர், பாரதியார் நகர் பகுதியில் உள்ள 6 தெருக்களின் உள்ளே பெருக்கெடுத்து வருவதால், அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அவர்கள் தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது எப்படி கடல் கொந்தளித்து கடல்நீர் ஊர்களுக்குள் புகுந்ததோ, அதுபோல் தற்போது கடல்நீர் எண்ணூரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல்துறை உயரதிகாரிகள், அப்பகுதிகளுக்கு விரைந்து, பொதுமக்களை கடற்கரை பகுதிகளுக்குச் செல்லவேண்டாம், சாலைகளில் சுற்றவேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், திருவொற்றியூர் எம்எல்ஏ செந்தில்குமார், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.