சென்னை: தமிழகத்தில் மழையால் 2.10 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழை மற்றும் டிட்வா புயல் பாதிப்புகள் குறித்து எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டிட்வா புயல் காரணமாக நாளை (இன்று) காலை வரை மழை விட்டுவிட்டு பெய்யும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை காலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் மாமல்லபுரத்தில் இருந்து தமிழகத்தின் உள்பகுதிகள் வழியாக செல்லக்கூடும்.
தமிழகத்தில் முதல்கட்ட கணக்கின்படி, 2.11 லட்சம் ஏக்கர் (85,521 ஹெக்டேர்) பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிந்த பிறகு சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, 582 கால்நடைகள் இறந்துள்ளன. 1,601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது. கடந்த அக்டோபரி்ல் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மழை பாதிப்பையொட்டி மொத்தம் 54 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 3,534 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை வழங்கப்பட்டுள்ளது என்றார்.