அமைச்சர் சரத்குமார்
தாம்பரம்: உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என அமைச்சர் சரத்குமார் அறிவுறுத்தினார்.
தாம்பரம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் தலைமை தாங்கினார். இதில் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி, ஒன்றிய, ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சி வளர்ச்சியை மேம்படுத்துவது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதால், நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். குடிநீர், சாலை, மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.
மக்களின் தேவைகளை அறிந்து, விரைவாக நிவர்த்தி செய்து அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், மக்கள் நலப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.