தமிழகம்

“ஓசி பயணம் என்று பேசியவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்” - அமைச்சர் சம்பத்குமார்

டி.ஜி.ரகுபதி

கோவை: “ஓசிப் பயணம் என்று பேசியவர்களை பேரவைக்குள் நுழைய விடாமல் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்” என்று அமைச்சர் வே.சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் இன்று (அக்.02) நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பின்னர், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முதல்வர் விஜய், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில், பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதில் ஒரு மைல்கல்லாக, வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டு்ள்ளது. பெண்கள் முன்னேறும் போது குடும்பம் முன்னேறும். குடும்பம் முன்னேறும் போது சமுதாயம் முன்னேறும், சமுதாயம் முன்னேறும் போது ஒட்டுமொத்த நாடும் முன்னேறும்.

எந்த வகையிலும் பெண்களுக்கு அசம்பாவிதம் நடந்தாலும் அதை உடனடியாக தட்டிக் கேட்கும் நபர் முதல்வர் தான். பெண்களுக்கு எதிரான தவறான, இழிவுபடுத்தும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். முதல்வரோடு 30 வருடங்களாக நாங்கள் பயணித்து வருகிறோம்.

அவருடைய தொலைநோக்கு சிந்தனை, மக்கள் நலன் எங்களுக்கு தெரியும். 120 நாட்களில் முதல்வர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். இதை பார்க்கும் போது, மற்ற கட்சியில் உள்ளவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தவெகவில் இணைகின்றனர்.

ஓசிப் பயணம் என்று கூறி, யார் யார் எந்தெந்த விதத்தில் மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தினார்களோ அவர்கள் இன்று சட்டப்பேரவைக்குள் வர முடியாத அளவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இனியாவது அவர்கள் திருந்த வேண்டும். இன்று மக்களின் பேராதரவு தவெகவுக்கு உள்ளது. தாராபுரம் இடைத்தேர்தல் விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்களாக ஸ்கிரிப்ட் தயாரித்து கட்டுக் கதை உருவாக்குவதற்கு பதில் கூறுவது நன்றாக இருக்காது. தேர்தல் களம் தவெகவுக்கு சாதாகமாகத் தான் உள்ளது.

தவெகவுக்கு தான் வாக்களிக்கப் போவதாக பிரச்சாரத்தின் போது மக்கள் தெரிவித்தனர். தாராபுரம், மதுராந்தகம் மட்டுமல்ல, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் முதல்வர் கை காட்டுபவர் தான் வெற்றி பெறுவர். தவெக இனி வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறும். நாளை மறுநாள் (4-ம்தேதி) முதல்வர் தாராபுரத்துக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் சம்பத்குமார் கூறினார்.

SCROLL FOR NEXT