சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் பெயரில் வெளியாகியுள்ள பரிந்துரைக் கடிதத்தால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளப்பியுள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்தபின் ஆவின் தலைவர், அரசு வழக்கறிஞர் உட்பட பல்வேறு நியமனங்களில் அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியதாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக தவெக நிர்வாகிகளே சிலர் பொதுவெளியில் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன.
அதேநேரம் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையாக நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார் பெயரில், ஒரு வழக்கறிஞரை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பதவிக்கு பரிந்துரைக்கும் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனால், அரசு வழக்கறிஞர் நியமனங்கள் அரசியல் பரிந்துரைகள் மூலம் நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத் தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் பரிந்துரை கடிதம் கொடுத்துள் விவரமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.