

மதுரை: விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.
இதை உறுதிசெய்து நிறைவேற்ற அனுமதி கோரி அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு நேற்று விசாரித்தது.
காணொலி வாயிலாக தர்மமுனீஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, விரைவில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ஜூலை 13-க்குள் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். தவறினால் சட்ட உதவி மையம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்படும் என உத்தரவிட்டனர்.