அமைச்சர் ராஜ்மோகன்

 
தமிழகம்

சட்டப்பேரவை நிகழ்வுகளை காண குழந்தைகள், பெரியவர்கள் ஆர்வம்: அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காத்திருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம். ஒரு தலைமுறையையே அரசியல் படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். இதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது அவரது பேரன்பையும், அத்துறை மீது அவருக்கு உள்ள ஈடுபாட்டையும் காட்டுகிறது. முதல்வர் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து கூறிய அஜித் குமாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்து குழந்தைகள் பேசும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் அதை எனக்கு பகிர்ந்து வருகின்றனர். தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை 9.30 மணிக்கு காத்திருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம். சினிமா வசனங்கள், பஞ்ச் டயலாக்குகளை ரீல்ஸாக போட்டவர்கள், தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை ரீல்ஸாக மாற்றி வருகின்றனர்.

ஒரு தலைமுறையையே அரசியல் படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். அனைவரும் இதை வரவேற்க வேண்டும். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி. எனவே, சட்டரீதியாக அதை எதிர்கொள்வார். எங்கள் தலைவர் சொன்னதுபோல, அரசுப் பணத்தில் நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம். தொடவும் விடமாட்டோம், தொட்டாலும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT