தாம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.4.92 லட்சம் மதிப்பிலான மின் பொருட்கள் திருட்டு

தாம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.4.92 லட்சம் மதிப்பிலான மின் பொருட்கள் திருட்டு
Updated on
1 min read

குரோம்பேட்டை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் மனநல காப்பகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 19 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், காப்பகத்தின் கட்டுமானப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வயர்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள் திருடுபோனதாகக் கூறப்படுகிறது.

காப்பகத்தின் உள்ளே இருந்த பொருட்கள் காணாமல் போனதை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுபிடித்த்தையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாசராஜா குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திருடு போனமின்வயர்கள், எலெக்ட்ரிகல் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சத்து 92 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில், குரோம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தவர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், திருடுபோன பொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் திருட்டு நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை என்பதால் அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். புதிய மனநல காப்பகம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அதற்காக வாங்கப்பட்ட மின் உபகரணங்கள் திருடுபோன சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.4.92 லட்சம் மதிப்பிலான மின் பொருட்கள் திருட்டு
செங்கல்பட்டில் திறந்தவெளி கிடங்கில் 50 ஆயிரம் டன் நெல் மழையில் சேதம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in