"விவசாயிகளின் எதிரி மோடியையும் அவருக்குத் துணை போகும் பழனிசாமியையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பொய்ப் பிரச்சாரங்களின் பிதாமகர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிவிட்டு, கருப்புச் சட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்தவர் மோடி. போராடியவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்தார்கள்.
வேளாண் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, விவசாயிகளின் துரோகி. திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் மூலம் 5 ஆண்டுகளில் ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, தற்போது 5.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு வரிச்சலுகை அளித்து இந்திய விவசாயத்தைச் சவக்குழியில் தள்ள பிரதமர் முயல்கிறார். போதைப் பொருள் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் எதிரி மோடியையும் அவருக்குத் துணை போகும் பழனிசாமியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.