

‘‘அரசியலுக்கு வரக்கூடாது என ரஜினிகாந்த்தை திமுக குடும்பம் மிரட்டியது. அவரை அரசியலுக்கு வராமல் பார்த்துக் கொண்டது” என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும், அதனை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தவெக சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தவெகவை பார்த்து உதயநிதி கொள்கை அற்ற கட்சி என்கிறார். நான் உங்களுடைய தொலைக்காட்சிக்கு விவாதத்துக்கு வருகிறேன். அதில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி, இருமொழி கொள்கை என்றால் என்ன என உதயநிதி என்னுடன் விவாதிக்கத் தயாரா?. அதில் நான் தோற்றுவிட்டால் அரசியலைவிட்டு போய்விடுகிறேன். இதற்கு தைரியம் இல்லை என்றால் எங்களுக்கு கொள்கை இல்லை என பேச வேண்டாம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை பேசவில்லை.
மாவட்டம் தோறும் விஜய் பிரச்சாரத்துக்கு சென்றதால் பெரும் எழுச்சி ஏற்பட்டது. இதையடுத்து செந்தில்பாலாஜியை அழைத்து ஏதாவது பிரச்சினையை பண்ணிவிட வேண்டும் என அஜெண்டா கொடுத்தார்கள். கரூரில் 10 ரூபாய் பாலாஜி என விஜய் பேசியபோதுதான் செருப்பு வீசினார்கள். எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. நேற்று ‘‘மருத்துவமனைக்கு சென்ற அனைவரையும் அழைக்க வேண்டும். ஆனால் என்னை மட்டும் ஏன் விசாரணைக்கு அழைக்கிறார்கள் என தெரியவில்லை’’ என செந்தில்பாலாஜி பேட்டி கொடுக்கிறார். ஏனெனில் நீங்கள்தான் முதல் குற்றவாளி. தமிழக போலீஸ் விஜய் கட்டுப்பாட்டுக்கு வரும்போது நீங்கள் அனைவரும் சிறைக்கு செல்வீர்கள்.
எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது. அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார். மாற்றம் உருவாக வேண்டும் என நினைத்த தலைவர்கள் தற்போது என்ன ஆனார்கள். மதிமுக தலைவர் வைகோ கட்சி ஆரம்பித்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவை சாடினார். ஆனால் தற்போது நான்கு சீட்டை பெற்று இருக்கிறார். அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். ஒரு தொகுதியில் மட்டும் அவர்கள் சின்னத்தில் போட்டியிடுவார்களாம். இது என்ன கூட்டணி என எனக்குப் புரியவில்லை.
2014-ம் ஆண்டு திருமாவளவன் திமுகவை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார் . தற்போது அவராலும் முடியவில்லை. கமல்ஹாசன் உட்பட அனைவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவரும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பிறகு மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். அப்படியென்றால் திமுகவின் பண பலத்தைப் பாருங்கள். எல்லாரையும் மிரட்டலாம், யாரையும் விலை கொடுத்து வாங்கலாம். ஆனால் தமிழகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய் தான். இவ்வாறு அவர் பேசினார்.