தமிழகம்

மின் கேபிள்களை சேதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் துறையில் புகார்: அதிகாரிகளுக்கு அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: மின் கேபிள்களை சேதப்படுத்தும் ஒப்பந்ததார்கள் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தலைமையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரிய உயர் அலுவலர்களுடனான விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய மின் உற்பத்தி, மின்தேவை மற்றும் மின்கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பருவமழையின் போது தடையில்லா மின்விநியோகம் வழங்குதல், மின்தளவாட பொருட்கள் இருப்பு நிலவரம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.

மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக சாலைகளை தோண்டும்போது மின் கேபிள்களை சேதப்படுத்திவிடுவதால் தேவையற்ற மின் தடங்கல் ஏற்படுகிறது.

அவ்வாறு மின் கேபிள்களை சேதப்படுத்தும் ஒப்பந்தாரர்கள் மீது காவல் துறையில் புகார் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், எரிசக்தி துறை செயலர் அனில் மேஷ்ராம், மின் வாரிய தலைவர் அருண் ராய், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர், இணை மேலாண்மை இயக்குநர் மெர்சி ரம்யா மற்றும் தொடர்புடைய கழகங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT