மதுரை: “பகலிலேயே நிதானம் இ்ல்லாமல் பேசி வருகிறார் உதயநிதி. அவர் பொதுவாழ்க்கைக்கு லாயக்கற்றவர். அவராகவே பொது வாழ்வில் இருந்து வெளியேற வேண்டும்” என மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதயநிதி தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மூன்று தலைமுறைகளாகவே இப்படித்தான் பேசி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் பேச்சு அவரது மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
விரக்தியின் உச்சத்தில் அவர் பேசி வருகிறார். பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார். ஆழ்மனதில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எப்படி, அவர் குடும்பம் எப்படி என்பதை அவர் பேச்சு வெளிப்படுத்துகிறது. அவர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தாரோ அதை வெளிப்படுத்தியுள்ளார்.
பக்கத்தில் பெண் வேட்பாளரை நிற்க வைத்துக்கொண்டு ஆபாசமாகப் பேசியுள்ளார். அவருக்கு ஆட்சி, அதிகாரம், பணம் தவிர வேறு எதையும் பற்றிக் கவலையில்லை. அரசியலையும் கற்றுக்கொள்ளவில்லை. ஆட்சியையும் கற்றுக்கொள்ளவில்லை.
பொது வாழ்க்கையில் இருந்து அவராவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவர் கடைசி வரை கத்துக்குட்டி தான். பொதுவாழ்க்கைக்கு லாயக்கற்றவர். அவரைப் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். உதயநிதியால் திமுகவிற்கு எதிர்காலம் இருக்கிறதா என்பதை திமுகவினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
40 ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றி வந்த பெண்கள் தற்போது தமிழக முதல்வர் விஜய்யை பின்பற்றி வருகிறார்கள். திமுகவுக்கு பெண்கள் செல்லாமல் இருப்பது அக்கட்சியினரின் ஆபாச பேச்சுக்களால் தான்.
உதயநிதியை வைத்து கட்சியை நடத்துவது குறித்து திமுகவினர் சிந்திக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தற்போது திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறார். அவர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா அல்லது திமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிமுகவை குழிதோண்டி புதைக்கும் வரை எடப்பாடி பழனிசாமி ஓயமாட்டார். திமுகவும், அதிமுகவும் நன்றாக ஆட்சி செய்தது எனப் பேசியுள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக நடந்து கொண்டது போலவே வீரமணி வழக்கில் திமுக நடந்து கொண்டது.
எடப்பாடி பழனிசாமியை நம்பி பயணிக்க முடியாததால் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். உதயநிதி முதல்வராக எடப்பாடி பழனிசாமி உழைக்கிறார். அவர் சொத்துக்களையும், குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்கவே திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறார். அதனால் தான் அதிமுகவில் தூணாக இருந்த அனைத்து தலைவர்களும் கட்சியை விட்டு வெளியேறியும், ஒதுங்கியும் உள்ளனர். அதிமுகவை குழிதோண்டி புதைக்காமல் எடப்பாடி பழனிசாமி மாறமாட்டார். அதிமுகவை மூட்டைகட்டி சேலத்தில் பரணில் வைக்காமல் விடமாட்டார்.
அரசு அலுவலகங்களில் 100 சதவீதம் லஞ்சம் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
எந்த அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்கப்பட்டாலும் பொதுமக்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றத்தை விரும்பிய அரசு இது. சமுதாயத்தை மாற்ற வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். இக்கட்டான காலக் கட்டத்தில் எங்களுக்கு உதவியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
ஆர்டிஐ தகவல் தொடர்பான அரசாணையை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். சில நிலைப்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதுகுறித்து பேச வேண்டிய இடத்தில் பேசிக்கொள்வோம். என்ன நடந்தாலும் அதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.